திங்கள்

இந்திய அணியை மாற்றியமைக்க வேண்டுமா?




நடந்து முடிந்த ஆஸ்திரேலியா இந்திய இடையிலான  டெஸ்ட் போட்டி களில்  படுதோல்வி அடைந்துள்ளது நமது அணி . இந்திய அணியில்  ஆட்ட நுணுக்கங்களை காணும் பொழுது சில காலத்திற்கு முன்பு டெஸ்ட்  அணி  பட்டியலில் முதலிடம்  மற்றும்  உலக கோப்பை வெற்றி பெற்ற அணி தானா என்பதில் ஐயம் ஏற்படுவதை   தவிர்க்க  முடியவில்லை. இந்திய  அணியை பொறுத்தவரை ஒரு கருத்து  பரவலாக  உள்ளது.

இந்திய துணை கண்டங்களில் சிறப்பான  ஆட்டத்தினை  வெளிபடுத்தும்  நமது  அணி ஆஸ்திரேலிய நியூசிலாந்து மற்றும்  இங்லாந்து   போன்ற வேக  களங்களில் சிறப்பாக விளையாடாது என்பது மட்டும் இல்லாது மிக  மோசமாக  விளையாடும் என்ற ஒரு கருத்து பொதுவாக இருந்து வருகின்றது. அந்த  கருத்தை நிருபிக்கும் வகையில்தான் இந்த ஆஸ்திரேலிய  தொடரும்  அமைந் துள்ளது. இந்த தொடரை காணும் பொழுது சில  விஷயங்கள்  தெளிவாக  தெரிகின்றன. அவைகளை இப்பொழுது காணலாம்.

    சச்சின் சத்தத்தில் சதம் அடிக்கவேண்டும்  என்று கனவு கண்டு இரண்டு மூன்று தொடர்களாக இந்திய அணியைச் சரியச் செய்துள்ளார். சேவாக் உடல் சமநிலை இல்லை. ஷாட் ஆடுவதற்கு முன்பும், பின்பும் அவரது பேலன்ஸ் சரியில்லை. ஹூக் , புல் ஷாட்களை ஆடாமல் நீண்ட நாட்களுக்கு ஓட்ட முடியாது, எனவே அவர் பின்னால் களமிறங்கவேண்டும், லஷ்மன் கிரீஸில் நின்ற படியே குப்பை கொட்டுகிறார். கம்பீரை அழைத்து ஒழுங்காக ஷாட் பிட்ச் பந்துகளை விளையாடும் வரை அணியில் இடமில்லை என்று கூறிவிடவேண்டும். தோனியை அழைத்து ஓய்வு பெற்ற மூத்த கேப்டன்கள் அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டவேண்டும். மேலும் கேப்டன் பேட்டிங் செய்வதும் அவசியம் என்பதையும் அவருக்கு அறிவுறுத்தவேண்டும்.

கிரிக்கெட் என்பது வெறும் பேட்டிங் மட்டுமல்ல. 40 வயது வரை ஒருவர் ரன் எடுக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபீல்டிங் என்று ஒன்று இருந்து வருகிறதே! அதற்கு நியாயம் செய்யுமா வயது? லஷ்மண் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுதும் முக்கியத் தருணங்களில் கேட்ச்களைக் கோட்டை விட்டு இஷாந்த், அஷ்வின் வயிற்றெரிச்ச்லைப் பெற்றார். டிராவிடின் கேட்சிங் திறமையும் போய்விட்டது. சச்சின் பாதுகாப்பாக டீப் திசையில் பீல்ட் செய்து வருகிறார். எனவே இவர்கள் தீவிரமாக வேறு பாதையை பற்றி யோசிப்பது நல்லது.


மேலும் அயல்நாடுகளில் அவர்களுக்குச் சாதகமாக பச்சைப் பசுந்தரை களத்தை அமைக்கின்றனர். அதனால் அவர்கள் இங்கு வரும்போது குண்டும் குழியுமான பிட்சைப் போட்டு நாம் பதிலடி கொடுக்கவேண்டும் என்ற மனோ நிலை சிறுபிள்ளைத் தனமானது.

சச்சின் டெண்டுல்கர் தலைமை வகித்த போது ஆஸ்ட்ரேலியாவிடம் 3- 0 என்று உதை வாங்கித் திரும்பினார். அப்போது தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் 2 டெஸ்ட் தொடர்களை விளையாட வந்திருந்தது. ஸ்ரீகாந்த் பிட்ச் தயாரிப்பு ஆலோசகராக இருந்தார்.

சச்சின், ஸ்ரீகாந்தை அழைத்து தனக்கு முதல் ஓவரிலிருந்தே பந்துகள் திரும்பவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை ஸ்ரிகாந்த் ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளார். ஆனால் என்னவாயிற்று பந்துகள் திரும்பின, ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறும் நிக்கி போயே 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவை தோல்வியுறச்செய்தார்!

அதுதான் எப்போதும் நடக்கும், இதெல்லாம் தீர்வேயல்ல. உண்மையில் நம் 'மகான்' வீரர்களின் ஆட்டம் முடிந்து விட்டது என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்வதும், புதிய வீரர்களை அறிமுகம் செய்து அவர்கள் சிறப்பாக விளையாட நல்ல சூழலை அமைத்துத் தருவதும்தான் பி.சி.சி.ஐ.யின் பணியாக இருக்க முடியும்.

இதனை விடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு அயல்நாட்டுத் தொடர் இல்லை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும், அடுத்த வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்தத் தோல்விகளை மறந்து விடுவார்கள் என்ற மனோநிலையையும் நிர்வாகமும் வீரர்களும் கொண்டிருந்தால் அது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மூடுவிழாவாக அமையும் என்பதில் ஐயமில்லை.


3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக