வியாழன்

விஸ்வரூபம் கருத்து சுதந்திரமா?


சர்ச்சை நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் விஸ்வரூபம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம்கள் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக அந்த திரைப்படத்தை வெளியிட தற்காலிக தடை விதிற்கும் அளவுக்கு சென்றுள்ளதும் அனைவரும் அறிந்த விடயம்தான்.  .எப்பொழுதுமே கமல் தனது படங்களில் முஸ்லீம்களை தவறாக சித்தரித்தும் கேலிசெய்வது போன்ற காட்சி அமைப்பது நாம் அறியாத ஒன்றல்ல.

சரி இப்பொழுது விசயத்துக்கு வருவோம். கமலஹாசன் தான் விரும்பியதை திரைப்படமாக எடுப்பதில் தவறு இல்லை. இது ஜனநாயக நாடு இங்கு ஒருவர் தனது கருத்தை திரைப்படமாக எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. அதை எதிர்ப்பது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றது என்றெல்லாம் சிலர் கருத்து கூறி வருகின்றனர். 

முதலில் ஒன்றை சொல்லிவிடுகின்றேன் கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று புலம்புகின்றவர்கள் ஒன்றை மனதில் வைத்துகொள்ள வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது என்ன அதற்கான அளவுகோல் என்ன என்பதை விளங்க வேண்டும். நமது ஊரில் பொதுவாக சுதந்திரத்தைப் பற்றி ஒன்றை சொல்லுவார்கள். அதாவது நமது சுதந்திரத்தின் எல்லை கோடு எதுவரை என்றால் நாம் நமது கையை நீட்டினால் நமக்கு எதிரில் இருக்கும் நபரின் மூக்கு நுனி வரை நமது சுதந்திரம் நமக்கு உண்டு. நமது கை நமக்கு முன்பிருக்கும் நபரின் மூக்கு நுனியில் பட்டுவிட்டால் நாம் அவரின் சுதந்திரதில் கை வைத்து விட்டோம் என்று பொருள். அது போல கமல் தனது கருத்தை சொல்லலாம் எதுவரை என்றால் முஸ்லீம்களின் மூக்கு நுனி மீது கமலின் கை படும் வரை. முஸ்லீம்கள் கமல் நீட்டிய கை எங்கள் மூக்கு நுனியில் படுகின்றது ஆகவே கமலஹாசன் தனது கையை மடக்கி கொள்ள வேண்டும் என கூறுகின்றார்கள். இது எந்த வகையில் கமலின்  கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

கமலஹாசன் அவர் எடுக்கும்  திரைப்படங்களில்  தன்னை பற்றி எதுவேண்டு மென்றாலும் சொல்லலாம் அது  அவர் கருத்து சுதந்திரம். தான்  நாத்திகன் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை  என சொல்வது அவர் உரிமை. அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் பைதியகார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா. அது போல தாங்கள் திரைப்படம் எடுக்கலாம் தவறு இல்லை அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வேறு ஒரு சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்து இது கருத்து சுதந்திரம் என்று ஜல்லி அடித்தால் அதை  ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

கமல் தான் விரும்பிய அனைத்தையும் சொல்லும் உரிமை  இருக்கிறது. அது எதுவரை என்றால் மற்றவர்களின் மனதை புண்படுத்தாத வரை  மட்டுமே. கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுபவர்கள் முதலில் இதை புரிந்து  கொள்ள வேண்டும்.