ஞாயிறு

தயாராகிறதா புது இயக்கம் ?



ஈழத்துத் தமிழ் மக்களுக்குப் போராடுவதற்காக விடுதலைப்புலிகளைப் போல ஒரு புதிய இயக்கம் முளைத்திருக்கிறது. ""மீண்டும் ஆயுதப் போராட்டம்.ஈழம்தான் இறுதி லட்சியம்'' என்று அறிவித்துள்ளது. ""மக்கள் விடுதலைப்படை'' என்ற இந்தப் புதிய இயக்கம்.
யார் இவர்கள் ? இவர்களை நம்பலாமா?
கிழக்கு மாகாண காட்டுப் பகுதியில் மறைந்திருந்து செயல்படுவதாக சொல்லப்படும் மக்கள் விடுதலைப்படையின் தளபதி கோணேஸின் பேட்டி, கடந்த வாரம் ""தி டைம்ஸ்'' பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. ""கடந்த மே மாதத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் ""மக்கள் விடுதலைப்படை'' என்ற புதிய ஆயுதக் குழுவைக் கட்டியெழுப்பி உள்ளோம். விரைவிலேயே நடவடிக்கைகளில் இறங்குவோம். தமிழர்களின் தனித்தாயகமான தமிழீழத்தை அடையும் வரையும் எங்கள் போராட்டம் ஓயாது. எமது இயக்கத்தில் இப்போது 300பேர் வரையிலான போராளிகள் இருக்கின்றார்கள். வன்னித்தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பவர்களில் இருந்து 5,000 தொண்டர்கள் வரையில் விரைவில் எம்மோடு இணைந்து கொள்வார்கள். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இருந்து எங்களின் இயக்கம் முற்றிலும் மாறுபட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மக்கள் விடுதலைப்படையின் அரசியல் நோக்கத்தை ஏற்று விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டு இணைந்து கொள்ளலாம்'' என்று இந்தப் பேட்டியில் கூறியுள்ளார் கோணேஸ்.
யார் இந்த கோணேஸ்?
""கோணேஸ் யார் என்பது ஈழத்தமிழர்களுக்கே குழப்பமாக இருக்கிறது. தனக்கு 40 வயதாவதாகவும், தான் 1980 களில் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும், பாலஸ்தீன இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தனக்குத் தொடர்பு உண்டு என்றும் அந்தப் பேட்டியில் கோணேஸ் குறிப்பிட்டுள்ளார். முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கோணேஸ் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் இவரா என்றும் தெரியவில்லை. ஆனால் ,திடீரென தோன்றியிருக்கும் இந்த ""மக்கள் விடுதலைப்படை'' பற்றியும் அதன் பின்னணி தொடர்பாகவும் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக, தமிழர்கள் விடுதலைப்போராட்டத்தை குழப்புவதற்காக சிங்கள அரசு உருவாக்கியுள்ள இயக்கமாக இது இருக்கலாம் என்ற சந்தேகமே அங்குள்ள பலருக்கும் இருக்கிறது'' என்கிறார் இலங்கையில் இருந்து வெளியேறிய ஒரு தமிழ் பத்திரிக்கையாளர்.
""ஏற்கனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இது போன்ற குழப்பங்களை உண்டாக்கினர். பிரபாகரன் மரணத்துக்குப் பிறகு செல்வராசா பத்மநாபன் இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை எடுத்து, சிதறியிருந்த போராளிகளை ஒருங்கிணைக்க முற்பட்டது சிங்கள அரசுக்கு பெரும் அபாயமாகத் தெரிந்தது. அதற்காக நயவஞ்சகமாக ஒரு திட்டத்தைப் போட்டது. அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கேபி தலைமையை ஏற்காது முரண்பட்டதைப் பயன்படுத்தி, கேபி தலைமையை ஏற்பதாக அறிவித்து அவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார் விடுதலைப்புலிகளின் ராம். இந்த ராம் சிங்கள ராணுவத்திற்கு விலைபோய்விட்டார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் கேபி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கேபியை நாடு கடத்தியது சிங்கள அரசு. அடுத்து மாவீரர் நாளான நம்பர் 27 ம்தேதி ராம் மூலமாக ""நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தலைவர் உருத்திரக்குமாரனைக் கடத்துவதற்கும் திட்டமிட்டனர். அதேவேளை, ராம் மூலமாக ""மாவீரர் நாள் அறிக்கை''யை வெளியிட்டு வெளிநாட்டுத் தமிழர் மத்தியில் குழப்பத்தையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தவும் திட்டம் தீட்டி இருந்தனர். அந்தச் சதியைக் கண்டுபிடித்த புலிகள் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் அறிவழகன் அதை அம்பலப்படுத்தினார்'' என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு பத்திரிக்கையாளர்.
இந்தத் துரோகப் பின்னணியில் தமிழர்களுக்காக இன்னொரு இயக்கம் துவக்கப்பட்டிருப்பதை தமிழர்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள்.
"" சிங்கள ராணுவம் பிடித்து வைத்துள்ள 11,000 முன்னாள் போராளிகளை விடுதலைச் செய்யக் கோரி பல இடங்களில் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் வருகிறது. மக்கள் விடுதலைப் படையைக் காரணம் காட்டி, ""தமிழ் பயங்கரவாதம்'' இன்னும் அழிந்துவிடவில்லை என்று சொல்லி, அந்தப் போராளிகள் விடுதலையைத் தள்ளிப் போடுவார்கள். மேலும், இவர்களில் தீவிரமான பல போராளிகளைக் கொன்றுவிட்டு அவர்கள் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்து காட்டுக்குள் மறைந்துவிட்டார்கள் என்று உலகிற்குச் சொல்லிவிடவும் இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாகவும் உயர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன. யார் உண்மையான போராளிகள் எனத் தெரியாமல் தமிழ் மக்களை குழப்பத்தில் வைத்திருக்கும் இந்தப் படையை சிங்கள அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் இன்னொரு பத்திரிக்கையாளர்.
இந்த சிக்கல்களில் தெளிவாக இருக்கும் ஒரே சங்கதி, தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக