வியாழன்

தேசத்தின் சொத்து...!!!

அம்பானி சகோதரர்களை நாம் அடிக்கடி சந்தித்திருக்கிறோம். குறுகிய காலத்தில் அவர்கள் எப்படி உலகக் கோடீசுவரர்களாக உருவானார்கள் என்பதனைப் பார்த்திருக்கிறோம். அதற்கு பங்குச் சந்தை எந்த அளவிற்கு அவர்களுக்குக் கைகொடுத்தது என்பதனையும் கண்டிருக்கிறோம்.

அவர்கள் நினைத்தால் பங்குச் சந்தை குறியீட்டு எண் இமயத்திற்கு எகிறும். அவர்கள் விரும்பினால் அதே குறியீட்டு எண் அதல பாதாளத்திற்கு அந்தர்பல்டி அடிக்கும்.

அவர்களுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் உண்டு. எப்படி வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களை உள்நாட்டு அழைப்புகளாகக் கணக்கிட்டு கோடிகளை அள்ளிக் கொண்டனர் என்பது உச்ச நீதிமன்றத்திலேயே அம்பலமானது. அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், முழுத் தொகையையும், அவர்கள் கட்டவில்லை. கட்டிய அளவிற்குப் போதும் என்று நமது மன்மோகன் அரசு கருணை காட்டியது. தள்ளுபடி செய்யப்பட்டது பல கோடி ரூபாய்! பெட்டிக்கடைக்காரர் வரி கட்டவில்லையென்றால்தான் கட்டிப்போட்டு வசூலிப்பார்கள்.

2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு அமைந்த பின்னர், அம்பானி சகோதரர்களுக்குள் சொத்துச் சண்டை வந்தது. `நீ என்னென்ன ஊழல் செய்தாய் என்று நான் அம்பலப்படுத்துவேன்' என்றார் முகேஷ் அம்பானி. `நீ செய்த ஊழல் எனக்குத் தெரியாதா? பட்டியல் வெளியிடுவேன்!' என்றார் அனில் அம்பானி.

இந்த ஊழல் சடுகுடுவின் உச்சகட்ட காட்சியைக் காண நாடு தயாராக இருந்தது. ஆனால், அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மும்பைக்குப் பறந்து சென்றார். அம்பானி சகோதரர்களுக்கிடையே சமரசம் செய்தார். அவர்களுக்கு ஏன் வாய்ப்பூட்டுப் போட வேண்டும்?

இப்போது மீண்டும் அம்பானி சகோதரர்களுக்கு இடையே ரோஷமான குத்துச் சண்டை ஆரம்பமாகி இருக்கிறது.

`அய்யோ! அய்யோ! எரிவாயு விற்பனை மூலம் இந்திய அரசை முகேஷ் அம்பானி ஏமாற்றுகிறார். அதனால் அரசின் எண்ணெய் எரிவாயுக் கழகத்திற்கு 50 ஆயிரம் கோடி நட்டம்' என்று அனில் அம்பானி அறிக்கை வெளியிட்டார்.

முகேஷ் அம்பானி காங்கிரஸ் தலைமையின் செல்லப்பிள்ளை. அனில் அம்பானி முலாயம் சிங்குகளின் வெல்லப்பிள்ளை. பாமரமொழியில் கூறுவதென்றால், முலாயம் சிங்குகள் அனில் அம்பானியின் அரசியல் தரகர்கள்.

சென்றவாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு அம்பானிகளுக்காகவும் நிழல் யுத்தம் நடத்தினர்.

முலாயம்சிங்குகள் அனில் அம்பானிக்காக வாதிட்டார்கள். இன்னொரு சாரார் முகேஷ் அம்பானிக்காக வாதம் செய்தார்கள். ஆனால், இந்த தேசத்திற்காக இடதுசாரிகளைத் தவிர வேறு யாரும் வாதாடவில்லை.

`இந்திய மண்ணிற்குள் கிடைக்கும் எண்ணெய் ஆகட்டும் எரிவாயுவாகட்டும் இதர கனிம வளங்களாகட்டும் அவை அனைத்தும் தேசத்திற்குச் சொந்தம். அதன் மீது உரிமை கொண்டாட எந்தக் கொம்பனையும் அனுமதிக்கக் கூடாது' என்று அவர்கள் வாதிட்டார்கள். பி.ஜே.பி. தியானத்தில் இருந்தது.

அம்பானி சகோதரர்களின் இன்றைய `போர்க்களத்தின்' பின்னணி என்ன? இந்தியாவில் எண்ணெய், எரிவாயு கண்டுபிடிக்கும் பணியை இந்திய அரசின் எண்ணெய் எரிவாயுக் கழகங்கள்தான் செயல்படுத்தி வந்தன.

ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் அந்த உரிமை தனியாருக்கும் வழங்கப்பட்டது. அப்போது பி.ஜே.பி.யின் தேர்தல் கஜானாவாகச் செயல்பட்டது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்தான். ஆகவே, அவர்களுக்கு இல்லாத சர்க்கரைப் பொங்கலா என்று குஜராத்திலும் ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி படுகையிலும் எண்ணெய் எரிவாயு எடுக்கும் உரிமையை பி.ஜே.பி. அரசு அளித்தது.

அந்த ஒப்பந்தம் என்ன தெரியுமா? கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவில் 12 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை இந்திய அரசின் எரிவாயு நிறுவனத்திற்கு அளித்தால் போதும். அனில் அம்பானியின் எரிவாயு (ஆர்.என்.ஆர்.எல்) நிறுவனத்திற்கு 28 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை முகேஷ் அம்பானி அளிக்க வேண்டும். அதற்கு மேல் கிடைக்கும் எரிவாயுவை முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் அறுபது - நாற்பது என்ற சதவிகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வெட்கக்கேடு. இதுதான் வாஜ்பாய் அரசு போட்ட ஒப்பந்தம். எடுக்கப்படும் எரிவாயுவில் 12 சதவிகிதம்தான் இந்திய அரசிற்குச் சொந்தம். மீதி 88 சதவிகிதம் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தம். இந்த ஒப்பந்தம் தேசத்தின் நலனையே மலிவான விலைக்கு விற்பதுதானே? நல்லவேளை மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்திருந்தால் ஜனாதிபதி மாளிகையையே ரிலையன்ஸ் குழுமத்திற்கு விற்றிருப்பார்கள்.

`ஒப்பந்தப்படி முகேஷ் அம்பானி தனக்கு எரிவாயு வழங்கவில்லை' என்று அனில் அம்பானி மும்பை உயர்நீதிமன்றம் சென்றார். உத்தரப்பிரதேசத்தில் தாம் நிறுவி வரும் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த எரிவாயு தேவை என்றும் அனில் அம்பானி வாதிட்டார்.



`அப்படி ஒரு மின் நிலையம் இன்னும் செயல்படவேயில்லை. ஆகவே, எரிவாயு தருவதற்கு இல்லை' என்று முகேஷ் அம்பானி முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தப் பிரச்னையில் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக மன்மோகன்சிங் அரசு செயல்படுவதாக அனில் அம்பானி மைதானத்திற்கு வந்து குற்றப் பத்திரிகை வாசித்தார்.

எரிவாயுவை முகேஷ் அம்பானியே விற்றால் அவருக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று அனில் அம்பானி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார். அவருடைய கவலை என்ன? அந்த ஒரு லட்சம் கோடியில் தனக்குப் பங்கில்லையே என்று பதைக்கிறார்.

இந்த அண்ணன்- தம்பி மல்யுத்தத்தில் ஓர் உண்மை அம்பலத்திற்கு வந்திருக்கிறது. கிருஷ்ணா-கோதாவரித் திட்டம் மட்டும் அவர்களுக்கு ஒரு லட்சம் கோடியை அள்ளித்தரும் என்பதுதான். இது தேசத்தின் கஜானாவிற்கு வரவேண்டிய பணம். இதனை ஒரே ஒரு குடும்பம் வாரிச் சுருட்டுவதற்கு வாஜ்பாய் அரசு வழி வகுத்துத் தந்திருக்கிறது.

இப்படி ஏமாளி ஒப்பந்தம் போட்ட அன்றைக்கு இந்திய அரசின் எரிவாயுக் கழகம் எப்படி ஒப்புக் கொண்டது? எல்லாம் மர்மமாகவே இருக்கிறது. அந்த மர்மங்கள் வெளி உலகிற்கு இனியாவது வர வேண்டும்.

இந்திய எண்ணெய் எரிவாயுக் கழகம் பத்து இடங்களில் துரப்பணப் பணியைத் தொடர்ந்தால் நான்கு இடங்களில் வெற்றி - ஆறு இடங்களில் தோல்வி என்பார்கள்.

அதே சமயத்தில் அம்பானி கம்பெனிகள் பத்து இடங்களில் துரப்பணப் பணிகளை ஆரம்பித்தால் ஒன்பது இடங்களில் வெற்றி - ஒரே ஒரு இடத்தில்தான் தோல்வி என்பார்கள். பத்திற்குப் பத்தும் வெற்றி என்றால் குட்டு உடைந்துவிடும்.

இந்திய அரசிற்கு எரிவாயு கண்டுபிடிப்பவர்களும் என்ஜினீயர்கள்தான். அம்பானி கம்பெனிக்குக் கண்டுபிடித்தவர்களும் என்ஜினீயர்கள்தான்.

எனவே, எண்ணெய் எரிவாயு உற்பத்தியில் தனியார் துறையினர் பெருமளவைத் தள்ளிக்கொண்டு போகும் நிலையில் காரியங்கள் நடைபெறுவதாக அப்போதே சந்தேகங்கள் முளைத்தன. நாம் சாவியைப் பூட்டிலேயே வைத்துவிட்டோம். அவர்கள் உற்பத்தியையும் விநியோகத்தையும் கதவைத் திறந்து கடத்திக் கொண்டு போகிறார்கள்.

நாடு முழுமையும் ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோல் `பங்க்'குகளைத் திறந்தது. திறந்த வேகத்தில் மூடியது. இப்போது அவர்கள் எடுக்கின்ற பெட்ரோல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அப்படியானால் நாட்டின் தேவை?

நாடு கடந்து செல்லும் அந்த பெட்ரோல் மீண்டும் வெளிநாட்டு முகமூடியோடு இந்தியாவிற்கு வருகிறது. சர்வதேசச் சந்தை நிலவரப்படி கொள்ளை விலைக்கு விற்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு.

இந்தியாவிலேயே ரிலையன்ஸ் நிறுவனம்தான் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வைத்திருக்கிறது. அந்த நிலையம் திறக்கப்பட்ட அடுத்த நாளே, இன்றைய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவும் முகேஷ் அம்பானியும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார்கள். ஆமாம். அவர்கள் அவ்வளவு ஆத்ம நண்பர்கள்.

முரளி தியோராவிடம் ரிலையன்ஸ் நிறுவனம் நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை வைத்திருக்கிறது. இந்திய அரசின் பெட்ரோல் நிலையங்களும் சர்வதேசச் சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கையாகும்.

இதன் பொருள் என்ன? பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது, அதற்கு மானியம் அளிக்கக் கூடாது என்பதாகும். இனியும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் நாடு எரிமலையாகும். ஆனால், அம்பானிகளுக்கு அதனைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. விருப்பம் போல பெட்ரோல் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் காண வேண்டும். ஆகவே, அரசின் எண்ணெய் விற்பனை நிலையங்களும் அதற்கு ஏற்ப விலையை உயர்த்தி விற்க வேண்டும் என்கிறார்கள்.

இப்போது கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எடுக்கும் எரிவாயுவிற்கு சர்வதேசச் சந்தை விலை தர வேண்டும் என்கிறார் முகேஷ் அம்பானி. அந்த வகையில் அண்ணனுக்கு அனில் ஆதரவுதான்.

இங்கே மலிவாக எடுக்கின்ற எரிவாயுவுக்கு நாம் ஏன் சர்வதேசச் சந்தை விலை தரவேண்டும்? அமெரிக்காவில் ஒரு சிலிண்டர் எரிவாயு விலை 435 ரூபாய். இறக்குமதி செய்து இங்கே விற்கும் ஒரு சிலிண்டர் எரிவாயுவுக்கு 300 ரூபாய் என்று விலை வைத்திருக்கிறோம்.

நாட்டின் சொத்தான எரிவாயு உற்பத்தி விற்பனை விலை மீது உரிமை கொண்டாட அம்பானிகளுக்கு அதிகாரம் இல்லை. அதனைத் தங்கள் குடும்பச் சொத்தாக்க அவர்கள் முயல்கிறார்கள்.

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வந்தது. அதன்மீது மத்திய அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கோரியது.

கிருஷ்ணா-கோதாவரிப் படுகை உள்பட கிடைக்கும் எரிவாயு அனைத்தும் நாட்டின் சொத்து என்று இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. வரவேற்க வேண்டிய, வாழ்த்த வேண்டிய முடிவு.

`எரிவாயுவின் விலையை நிர்ணயிப்பதற்கும் விநியோகத்திற்கும் இந்திய அரசிற்குத்தான் முழு உரிமை உண்டு' என்று சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்திருக்கிறார்.

`அம்பானிகளின் குடும்பச் சண்டையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. அதே சமயத்தில் எரிவாயுவை அவர்கள் தங்கள் குடும்பச் சொத்தாக்க முயல்வதைத் தடுப்போம்' என்றும் அவர் கூறியிருக்கிறார், வரவேற்போம்.

பொதுத்துறை நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையம் கிருஷ்ணா-கோதாவரிப் படுகை தரும் இயற்கை வாயுவை விநியோகிக்கும் உரிமையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேசத்தின் சொத்தை ஒரு குடும்பம் கொள்ளையடிப்பதைத் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக