வியாழன்

அவலத்திலும் அவலம்!

சிறார்களுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்ட மசோதா, ஏற்கெனவே பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் களையப்படாமல், அதே வடிவத்தில் மக்களவையில் நிறைவேறியுள்ளது. அதன் குறைபாடுகள் பின்னாளில் பன்முகச் சிக்கல் கொள்ளும்போது மீண்டும் சட்டத் திருத்தம் கொண்டுவந்துவிடலாம் என்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கக்கூடும்.

இந்த மசோதாவில் முக்கியமான குறைபாடுகள் நான்கு உள்ளன. அவை-

1. 6 முதல் 14 வயது வரை எனப்படும் கால அளவு; 2. தனியார் பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்குமா என்பதில் தெளிவு இல்லாமல் இருப்பது; 3. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்காக ஒதுக்கப்படும் என்று சொன்னால், அது யாருக்காக, எந்த அடிப்படையில், எந்த விகிதசாரத்தில் என்பது தெளிவுபடுத்தப்படாதது; 4. கற்பித்தலுக்கு ஆசிரியரைப் பொறுப்பேற்கச் செய்யும் நிர்பந்தம் இல்லாமல் இருப்பது.

இந்த நான்கு குறைபாடுகளும் இந்த மசோதா பயனற்றுப் போகச் செய்யும் வல்லமை கொண்டவை.

முதலாவதாக, 6 முதல் 14 வயது வரை என்ற காலஅளவு அர்த்தமற்றது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் 3 வயதிலேயே குழந்தைகளை நர்சரி பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள். இப்போது இந்தச் சட்டத்தை 3 வயது முதலாக என்று திருத்தியிருந்தால், தற்போது ஆங்காங்கே இருக்கும் பாலர் பள்ளிகளை இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் ஏற்படச் செய்து, கிராமக் குழந்தைகளும் 3 வயது முதலாகவே கட்டாயமாகப் பள்ளி செல்லவும், செயல்வழிக் கற்றல், விளையாட்டு வழியில் கற்றல் ஆகியவற்றால் அறிவை மேம்படுத்திக் கொண்டு 6-வது வயதில் முதல் வகுப்பில் நுழையவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

மேலும், உயர்கல்வியின் தொடக்கப் படி என்று அழைக்கப்படும் மேல்நிலைப் பள்ளியை (சில மாநிலங்களில் ஜூனியர் காலேஜ் என்கிறார்கள்) எட்ட வேண்டுமானால் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த மசோதாவின்படி 14 வயதில், அதாவது 9-ம் வகுப்புடன் கட்டாய இலவசக் கல்வி முடிந்து போகிறது. அதன்பிறகு பள்ளியையோ அல்லது மாணவரையோ கட்டுப்படுத்தும் அதிகாரத்தைச் சட்டம் இழந்துவிடுகிறது. இந்த மசோதாவை வயதுகளால் நிர்ணயிக்காமல், "10-ம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி' என்று ஒரே வரியில் திருத்தியிருந்தால், 20 வயது இளைஞன்கூட 10-ம் வகுப்பை முடித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

அடுத்துவரும் மிகப் பெரிய கேள்வி- தற்போது கொள்ளை லாபத்தில் செயல்பட்டுவரும் தனியார் நர்சரி பள்ளிகள் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தொடர்ந்து அபரிமிதமான கட்டணத்தை வசூலித்துக்கொண்டே இருக்குமா அல்லது இலவசக் கல்வியை வழங்குமா? என்பதுதான். மத்திய அரசின் இந்த மசோதா அது பற்றி தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.

தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆங்கில வழிக் கல்வி என்ற போர்வையில், தொடர்ந்து உயர் வருவாய் பிரிவினரின் குழந்தைகளுக்கு அபரிமிதமான கட்டணங்களை வசூலித்துக் கொண்டு கற்பிக்கும் சேவையைத் தொடர்ந்து நடத்துவதற்கு நமது அரசியல்வாதிகள் நிச்சயம் துணை போவார்கள். இதனால் தற்போது தமிழ்நாட்டில் காணப்படுவதைப் போலவே, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவரின் கல்வித் திறனுக்கும் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் கல்வித் திறனுக்கும் காணப்படும் மிகப்பெரும் இடைவெளி, இந்தியா முழுவதிலும் இருக்கப்போகிறது.

மக்களவையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் குறிப்பிடுகையில், "இந்தியாவில் தொடக்கப் பள்ளிகளில் சேரும் 100 மாணவர்களில் 12 பேர்தான் உயர்கல்விக்கு வருகிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 50 முதல் 70 ஆக இருக்கிறது. உலகின் சராசரி எண்ணிக்கை 27 ஆக இருக்கிறது. இந்தியாவில் 2012-ம் ஆண்டில் உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 முதல் 35 சதவீதமாக உயர வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம்' என்று கூறியிருக்கிறார்.

அதாவது, இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே- உயர்கல்வியை ஆக்கிரமித்துள்ள தனியார் கல்லூரிகளுக்கு ஆள்அனுப்பும் வேலைதான்.

கல்வி கட்டாயம், ஆனால் அறிவு கட்டாயமல்ல என்பதுதான் இந்த மசோதாவின் மிகப்பெரிய குறைபாடு. மசோதாவின் குறைபாடுகளைப் பார்க்கும்போது தனியார் கல்லூரிகளுக்கும்கூட இந்தச் சட்டம் பயனுள்ளதாக அமையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பது சரி. அதற்காக நாம் கொடுக்க இருக்கும் விலை என்ன தெரியுமா? பணமிருந்தால் மட்டுமே உயர்கல்வி என்கிற அவலநிலை. இதற்கு அரசே துணை போகிறது என்பதுதான் அவலத்திலும் அவலம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக