புதன்

நீதி நிலைதடுமாறுகிறதே...!

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதல் வன்முறையில் முடிந்தது உலகறிந்த உண்மை. அத்தனை தொலைக்காட்சி அலைவரிசைகளும் தொடர்ந்து ஒளிபரப்பி, தமிழகத்தின் மானத்தை உலக அரங்கில் சந்தி சிரிக்க வைத்த சம்பவம் அது. இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா, வேண்டாமா?
காக்கிச் சட்டைகளும், கறுப்புக் கோட்டுகளும் வரிந்து கட்டிக்கொண்டு, ரௌடிகள்போல நடந்து கொண்டனர் என்பது மட்டுமல்ல, கௌரவத்திற்குரிய உயர் நீதிமன்ற நீதிபதியே கல்வீச்சில் காயமடைந்த கீழ்த்தரமான செய்கை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறவும் செய்தது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தை வழக்குரைஞர்கள் தங்களது அரசியல் மனமாச்சரியங்களை வெளிப்படுத்தும் இடமாக்க ஆரம்பம்முதலே உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனுமதித்திருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் வழக்குரைஞர்களிடம் காட்டிய மெத்தனப் போக்குதான், நீதிமன்ற வளாகத்தில் எத்தகைய செயலில் ஈடுபட்டாலும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்கிற தைரியத்தை அவர்களுக்கு அளித்தது என்றும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை தெளிவுபடுத்தியது.
சட்டத்துக்குத் தாங்கள் அப்பாற்பட்டவர்கள் என்று கருதும் வழக்குரைஞர்களை வன்மையாகக் கண்டித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை, காவல்துறையினரின் அத்துமீறல்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ""வன்முறையில் ஈடுபட்ட வழக்குரைஞர்களைக் கலைத்த பின்னரும் காவல்துறையினர் தொடர்ந்து தடியடி நடத்தினர் என்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற வாகனங்கள், வழக்குரைஞர்களின் அலுவலகங்கள், ஏன் நீதிபதிகள்கூட காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆள்பட நேர்ந்தது என்றது அந்த அறிக்கை.
நீதிமன்ற வளாகத்தில் தடியடி நடத்தவோ, அத்துமீறி நடந்து கொள்ளவோ காவல்துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்று கேள்வி எழுப்பிய அந்த அறிக்கை, நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் அத்துமீறிய செயல்களை வன்மையாகக் கண்டித்தது. தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, தான் தொடர்ந்து இந்த விசாரணையில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த எந்த சிபாரிசையும் உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ நடைமுறைப்படுத்தவில்லை. ஒரு சில வழக்குரைஞர் சங்கங்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சம்பவத்துக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் இருவரைப் பணி நீக்கம் செய்ய அரசுக்குப் பரிந்துரைத்து நீதிபதிகள் முகோபாத்யாயா, தனபாலன், சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அந்தக் காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தையே அணுகும்படி கூறப்பட்டது.
அரசாவது அந்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்ததா என்றால், ஊஹும். உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை சட்டை செய்யவே இல்லை. இரண்டு அதிகாரிகளும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இதுதான் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் சிபாரிசுக்குத் தரும் மரியாதை!
தாங்கள் எந்தத் தீர்ப்பளித்தாலும், தமிழக அரசு அந்தத் தீர்ப்புக்கு மதிப்புத் தரப்போவதில்லை என்பது நீதிபதிகளுக்கு உறுதியாகிவிட்டது காரணமா, இல்லை வழக்குரைஞர்களுக்கோ, காவல்துறையினருக்கோ எதிராகப் பாரபட்சமில்லாமல் தீர்ப்பு வழங்கி அவர்களது விரோதத்தை நாம் ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்கிற தயக்கமா என்று தெரியவில்லை, நீதிபதி சந்துருவில் தொடங்கி மூன்று பேர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, தாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
விருப்பு வெறுப்பில்லாமல், தங்கள் முன் வருகின்ற வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதுதானே நீதிபதிகளின் கடமை? பயம் காரணமாகவோ, சிலரது அதிருப்திக்கு ஆளாகிவிடுவோமே என்கிற சுயநலம் காரணமாகவோ, நமது தீர்ப்பு நிறைவேற்றப்படாது என்கிற அவநம்பிக்கை காரணமாகவோ, ஒரு குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பளிக்க விரும்பவில்லை என்று நீதிபதி ஒருவர் சொல்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, ""நான் இந்த விசாரணையைத் தொடர விரும்பவில்லை'' என்று ஒதுங்குகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் தாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நழுவுகிறார்கள். எந்த ஒரு வழக்கையும் விசாரித்து, சட்டம், நீதி, நேர்மை ஆகிய அளவுகோல்களைப் பயன்படுத்தித் தீர்ப்பளிக்க முடியாதவர்கள், ஒதுங்கக் கூடாது. பதவி விலக வேண்டும். அதுதானே முறை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக