தனியார் பள்ளி பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி ஒருவர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்த ஓட்டையே மாணவியின் உயிரை பறித்தது கொடுமையிலும் கொடுமை. இந்த அலட்சியத்துக்கு பேருந்தை ஆய்வு செய்த அதிகாரிகளா? தமிழக அரசா? என்ற வினா மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரை சேர்ந்த மாதவன்- பிரியா தம்பதிக்கு பிரனவ் என்ற மகனும், சுருதி (6) என்ற மகளும் உள்ளனர். பிரனவ் அருகில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். சுருதி சேலையூரில் உள்ள சியோன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தாள்.
தினமும் பள்ளிக்கூடத்துக்கு பள்ளி பேருந்தில் சென்று வருவாள் சுருதி. வழக்கம்போல நேற்று பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். டிரைவர் இருக்கைக்கு பின்னால் 6வது வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த சுருதி, இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த பெரிய ஓட்டை ஒன்று இருந்துள்ளது. அந்த ஓட்டையை சாதாரண பலகை வைத்து மூடப்பட்டுள்ளது. அதுவும் பலகை அசையாமல் இருக்க ஆணி எதுவும் அடிக்கவில்லை. பேருந்து வேகமாக திரும்பியபோது பலகை விலகி அந்த ஓட்டையின் வழியே கீழே விழுந்துவிட்டாள் சுருதி. அப்போது பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக இறந்துவிட்டாள் சுருதி.
சாலையில் மாணவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு டிரைவரை பிடித்து அடித்து உதைத்தனர். கொதிப்பில் இருந்த பொதுமக்கள் மாணவ-மாணவிகளை கீழே இறங்கினர். பின்னர் பேருந்தை தீ வைத்து கொழுத்தினர். தன்னுடைய பிள்ளை இறந்த தகவல் கேட்டு ஓடோடு வந்த பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பள்ளி பேருந்தில் ஓட்டை இருந்தும் அதை கவனிக்காமல் மாணவியின் உயிரை பறித்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம். இதில் வேடிக்கை என்னென்றால், 20 நாட்களுக்கு முன்பு தான் பேருந்து எப்சி செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பேருந்து சரியான கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று ஓட்டிப்பார்க்க வேண்டும். ஆனால், அவரோ எதையும் செய்யாமல் பேருந்துக்கு ஓகே சொல்லிவிட்டார். இதற்கு காரணம் லஞ்சம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியின் தலைமை அலுவலகம் சேலையூர் இந்திராநகரில் உள்ளது. மாடம்பாக்கம், செம்பாக்கத்தில் இந்த பள்ளிக்கு சொந்தமாக பள்ளிகள் உள்ளது. மேலும் சேலையூரில் ஆல்வின் மெமோரியல் என்ற பெயரில் சிபிஎஸ் பள்ளியாக செயல்படுகிறது.
இந்த பள்ளிகளில் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், சேலையூர், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம், மேடவாக்கம், சந்தோஷபுரம், முடிச்சூர், மணிமங்கலம், படப்பை, வண்டலூர், கூடுவாஞ்சேரி, குரோம்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த மாணவ - மாணவிகளை அழைத்து வரவும், வீட்டில் கொண்டு விடவும் பள்ளி பேருந்து, வேன், மினி வேன், டாடா மேஜிக் என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. சில தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்தும் மாணவர்களை அழைத்து செல்கிறது பள்ளி நிர்வாகம். இதற்காக மாணவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை வசூல் செய்யும் பள்ளி நிர்வாகம், பேருந்துகளை சரியாக பராமரிப்பது இல்லை என்று புகார் கூறப்படுகிறது.
பள்ளிகள் திறந்தவுடன் பள்ளி வாகனங்களில் சோதனை செய்கின்றனர் போக்குவரத்துறை அதிகாரிகள். சோதனையின் போது வாகனங்களின் கியர் பாக்ஸ், பிரேக், இருக்கைகள், கண்ணாடிகள், லைட்டுகள், அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி செல்கிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள், பேருந்து உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை.
.