ஒரு காலத்தில் கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு என்ற அளவில் இருந்தது. சிலர் மைதானத்தில் விளையாட பலர் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தனர். மெல்ல மெல்ல கிரிகெட் தெற்காசிய நாடுகளில் கால் ஊன்ற துவங்கியது. குறிப்பாக உலகின் மிகபெரிய சந்தை பகுதியான இந்தியாவில் கால் ஊன்ற துவங்கியது. அப்படி இந்தியாவில் கால் ஊன்ற துவங்கிய கிரிகெட் இந்திய மக்களிடம் இருந்த பெரும்பான்மையான விளையாட்டுக்களை குழி தோண்டி புதைத்தது.
இன்று நம்மை ஆட்டிவித்துக் கொண்டிருக்கும் கார்பெரேட் நிறுவனங்கள். கருப்பு என்பது ஒரு தீண்ட தகாத நிறம் என்பது போலவும். கருப்பாக இருப்பவர்கள் சமுதாயத்தில் ஒதுக்க பட வேண்டியவர்கள் எனவும் தனது விளம்பரங்கள் மூலமாக பிரச்சாரம் செய்துவருவதன் பாதிப்பு இன்றைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பினாலே அவர்கள் கருப்பாக மாறி விடுவார்கள். வெயில் கொடுமையால் அவர்கள் எதிர் காலமே வீணாகி விடும். கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தும் இன்று அவர்கள் வெயிலில் சுற்றி கருப்பாக மாறியதால் பாதிக்க படும் என்ற மன நிலைக்கு நமது கார்பரேட் நிறுவனங்கள் நமது சமூகத்தை மாற்றி விட்டது.
மேலும் குழந்தை பருவம் என்பது எதிர் காலத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த உடனே ஏதாவது ஒரு நிறுவனத்தில் அடிமையாக வேலை பார்த்து மாதா மாதம் சம்பளம் பெற தயார் படுத்தும் ஒரு பருவமாக மட்டுமே குழந்தை பருவத்தை பார்க்கும் மன நிலையை நமது கல்விக்கூடங்களும் பெற்றோரும் ஏற்படுத்தி விட்டனர். குழந்தை பருவம் என்பதும் மாணவ பருவம் என்பதும் படிக்க மட்டும் தான் என்ற மன நிலைக்கு நமதும் பிள்ளைகளும் வந்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் நமது பிள்ளைகளை எந்த நேரமும் படித்து கொண்டிருப்பதும் டிவி பார்ப்பதும் மட்டுமல்ல. விளையாடுவதும் இந்த பருவத்தின் ஒரு அங்கம் தான் என சிறிதாவது சிந்திக்க வைத்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வர பெரிதும் உதவுவது கிரிகெட் மட்டுமே. இந்த பிள்ளைகளிடம் கிரிகெட் அறிமுகமாகி இருக்கா விட்டால் எந்த ஒரு குழந்தையும் விடுமுறை நாட்களில் கூட வீட்டை விட்டு வெளியே வர வேண்டி இருந்திருக்காது.
ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் மட்டும் நடந்த காலத்தில் அது பெரும்பாலான தெற்க்காசிய நாடுகளில் ரசிக்கும் விளையாட்டாக இல்லை. பின்பு அறிமுகமான ஒருநாள் போட்டியின் மூலமாக தெற்காசிய நாடுகளில் அது அசூர வேக வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக இந்தியாவில் நான்கு கால் பாய்ச்சலில் வளர்ந்தது.
இந்த கால கட்டத்தில் தான் உலகின் மிக பெரிய சந்தையான இந்தியாவில் கால் ஊன்ற ஒவொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. பெரு நிறுவனங்களுக்கு தங்களின் பொருளை சந்தை படுத்த இந்த கிரிகெட் எனும் மந்திர சொல் பெரிதும் உதவும் என்பது புரிய ஆரம்பித்தது. அந்த புள்ளியில் இருந்து தொடங்கியது கிரிகெட்டின் அசூர வளர்ச்சி.
இந்திய அணியையும் அதில் விளையாடும் வீர்களும் இந்தியர்கள் மனத்தில் ஒரு ஹீரோவாக பதிய வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எந்த பொருளை வாங்க சொல்கின்றார்களோ அந்த பொருளை மக்கள் கண்ணை மூடி கொண்டு வாங்குவார்கள். அவர்களை ஹீரோவாக்க வேண்டு மென்றால் அதற்கு ஒரு வில்லன் வேண்டும் அல்லவா. இருக்கவே இருகின்றார்கள் பாகிஸ்தானியர்கள். நமது அரசியல் வாதிகளும் மீடியாவும் நமது மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம் முதல் நமது வீட்டு குடிநீர் குழாயில் குடிதண்ணீர் வராமல் இருப்பது வரை அனைத்திற்கும் பாகிஸ்தானின் சதிதான் காரணம் என்ற பிம்பம். அதே போன்று பாகிஸ்தானிலும் அவர்களுக்கு காலை தூங்கி எழுந்ததும் கக்கா வர வில்லை என்றாலும் அதற்கும் இந்தியாவின் ரா அமைப்புதான் காரணம் என நம்ப வைத்து இருகின்றார்கள். ஆகா இந்திய கிரிகெட்டிற்கு ஒரு வில்லன் கிடைத்தாகி விட்டது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டிகளை இரு நாட்டுக்கும் இடையில் நடக்கும் போரை போன்று மீடியாக்களால் ஊத்தி பெருசாக்க பட்டது. இந்திய விளையாட்டில் தோற்றால் ஒவ்வொரு இந்தியனும் நேரடியாக பாகிஸ்தானிடம் தோற்றதாக வருதப்பட்டான். இந்தியா வெற்றி பெற்றால் அவனே நேரடியாக பாகிஸ்தானுடன் சண்டை இட்டு வெற்றி பெற்றதாக ஆர்ப்பரிதான். அவன் சார்பாக போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்ற வீரர்கள் அவன் மனதில் ஹீரோவாக அல்ல கடவுளாக தெரிந்தார்கள்.
இந்த நாளுக்காக தான் காத்து இருந்தார்கள் பெரு நிறுவன முதலாளிகள். இந்த வாய்ப்பை கிரிகெட் எனும் பிம்பத்தை மிக சரியாக பயன் படுத்த துவங்கினார்கள். அதன் விளைவு காலையில் தூங்கி எழுந்து எந்த பற்பசைக் கொண்டு பல் துலக்க வேண்டும் என்பதில் துவங்கி இரவு தூங்கும் போது எந்த நிறுவனத்தின் காற்றாடி துணை கொண்டு தூங்க வேண்டும் என்பது வரை முடிவு கார்பரேட் நிறுவனங்களே முடிவு செய்தன. நாம் அனைவரும் அவர்களின் பொருட்களுக்கு அடிமையாகி போனோம்.
தொழில் போட்டி அதிகமானது. மேலும் யோசித்தார்கள். கிரிகெட் தங்க முட்டை இடும் வாத்து அதை வைத்து முடிந்த வரை சம்பாதித்து விட வேண்டும் என முடிவெடுத்தார்கள். இரு நாடுகளுக்கு இடையில் போட்டி நடத்தி தேசிய பற்றை ஊட்டி அதன் மூலம் சம்பாதிப்பது மட்டும் போதாது. வேறு எதாவது செய்தாக வேண்டும். யோசித்தார்கள். கிரிக்கெட்டில் தேசிய உணர்வு என்பதை தாண்டி அதை ஒரு கமர்சியல் சினிமாவாக மாற்றினால் என்ன என யோசித்தார்கள். ஐம்பது ஓவர் கொண்ட போட்டிகளாக இருந்ததை இருபது ஓவர்களாக குறைத்தார்கள். துவக்கம் முதல் இறுதி வரை அதிரடி, அரைக்குறை ஆடை உடுத்திய வெளிநாட்டு மங்கைகளின் ஹை டெக் நடனம். வீரர்களிடையே உள்நாடு வெளி நாடு என்ற பாகு பாடு கிடையாது. அணைத்து வீரகளையும் ஏல முறை விற்பனை அவர்களை வாங்கும் கார்பரேட் நிறுவனங்கள் என புது ஜிகினா பூசும் வேலையை வேலைகள் செய்தார்கள். பணம் பணம் எங்கு திரும்பினாலும் பணம்.
பேராசை யாரை விட்டது நிறுவனங்கள் கொட்டித் தரும் பணம் விளம்பரம் மூலம் கோடிகளில் பணம் இருந்தும் போதவில்லை. பண ஆசை யாரை விட்டது. பணத்திற்கு ஆசை பட்ட வீரர்கள்.சூட்டத்தில் ஈடு பட்டதால் காவல் துறையால் கைது செய்ய பட்டார்கள். இவர்கள் கைது செய்ய பட்டதால் கிரிகெட் எந்த விதத்திலும் பாதிக்க பட போவதும் இல்லை. அது பாதிக்க நமது பெரு முதாளிகள் விட போவதும் இல்லை. இது மனம் காய்க்கும் மரம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். நாமும் இதோ இந்த சேனலில் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்கள் கைது என்ற செய்தியை பார்த்து விட்டு அடுத்த கணமே சேனலை மாற்றி ஐபிஎல் மேட்சை பார்க்க துவங்கி விட்டோம்.
இந்த விளையாட்டால் நாம் பெற்றது அதிகமா அல்லது இழந்தது அதிகமா முடிவை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.